Skip to main content

TWO GENTLEMEN OF VERONA ( IN THAMIZH)




              
                       TWO  GENTLEMEN OF  VERONA

PLAY  BY  WILLIAM  SHAKESPEARE ( 1590)
AS RETOLD  BY  MARY  LAMB ( 1800 )
( in TALES  FROM SHAKESPEARE)
ADAPTATION AND  TRANSLATION  BY  RSR
( with  some  padding and pruning-without  changing  the  theme  and  message)
21-3-2020
COPY  RIGHT MATERIAL 
( this is  8th  tale in a series  of  10  tales)
see  index  page  for  the  links  to  the  other  tales. 
---
Names and locations  changed  for  easy  familiarity  for Indian ( Thamizh )students
 Proteus----> ChikkaRaju  , Valentine->Veera Raju, Julia-> Pankajam, Lucetta-> Akkamma
Lady Silvia-> Rathnaadevi, Thurio-> ChannaReddy  ,Eglamour-> SubbuSarma
Duke of Milan-> RudraPratapaReddy,Milan-> Vijayapuram , page Sebastian>SivaRaju 
 https://comediesmarylamb.blogspot.com/2020/03/two-gentlemen-of-verona.html
 

https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html 
-----------------------------------------------



             பெரிய வீட்டுப் பிள்ளைகள்        

 அந்தக் காலத்து  ஆந்திர   தேசத்தில்,  நெல்லூர்  பகுதியில்   ஒரு  மிகப்பெரும்  மிராசுதார்  இருந்தார்.  அவரது  பெயர் ரங்கராஜு.   அவர்  இருந்த   கிராமத்தில், அவருக்கு ஏராளமாக நிலம்  சொத்து  எல்லாம்  இருந்தது. அவருக்கு   ஒரே மகன்.   அவனது பெயர்  சிக்கராஜு..  சிக்கராஜுவுக்கு வீரராஜு என்று ஒரு நெருங்கிய நண்பன்  இருந்தான். இருவரும்  அவர்களின் கிராமத்தில்  இருந்த   பண்டிதரிடம் பாடம்   படித்தவர்கள்,   திண்ணைப்  பள்ளிக்கூடம்தான் 

பிறகு வெளி  ஊரில் இருந்த  பெரிய   பண்டிதர்கள் , வீட்டுக்கே   வந்து நிறைய    இலக்கணம், இலக்கியம்,  வரலாறு, சங்கீதம்  என்று  பல   சாஸ்திரங்களில் பாடம்  சொல்லிக்கொடுத்தார்கள் .  வீட்டில் பெரிய   நூலகம்  வேறு இருந்தது.

 மேலும், கிராமத்தில்  இருந்த    சிலம்பம்,, மல்யுத்தம்,  வாள்சண்டை, எல்லாம் தெரிந்த   அனுபவ     வீரர்களும், அந்தப் பணக்காரப்  பிள்ளைகளுக்கு  எல்லாவற்றையும் . சொல்லிக்கொடுத்தார்கள்
-----------------------  
. பெரிய்ய  வீடு.  ஏராள வருமானம்.   எடுபிடி  சேவகர்கள் . ஊரில் பெரிய அந்தஸ்து,  வேளாவேளைக்கு     விரும்பியபடி  விருந்துச்   சாப்பாடு. .   நண்பர்களுடன்  இலக்கிய,  தத்துவ  ,விவாதம் விளையாட்டு,    அரட்டை. ஊர் சுற்றவேண்டியது.   !.   வேறென்ன வேண்டும்? இப்படி  அந்த  இரன்டு பெரிய வீட்டுப்   பிள்ளைகளின்    இளமை  கழிந்தது.

    வீர ராஜு   குடும்பம் ஏழை   அல்ல.  இருந்தாலும் பெரிய   பணக்கார  வீடும்    அல்ல.  . அவனுக்குத்  தெரிந்த அவனது  கிராமத்து ஆட்கள்  பலர்,  பக்கத்தில் இருந்த   பட்டணத்திற்கு   சென்று,    மேலபடிப்பு  படித்து, பெரிய   உத்யோகத்தில்  அமர்ந்து  நிறைய   சம்பாதித்தார்கள் . ஒரு   சிலர்  ஏதேனும்   வியாபாரம்  செய்து பெரிய  தனவந்தர் ஆகிவிட்டனர்.  ஒரு   சிலர் வெளிநாட்டுக்கெல்லாம் போய்   மிகவும் பெரிய  புள்ளிகளாகிவிட்டனர்.

 இன்னும்  சிலர்  ,  பட்டணத்தின் ஜமீன்தாரிடம்   உதவியாளராக  சேர்ந்து ஜமீன்  அதிகாரியாக  வசதி  படைத்த வாழ்க்கை   பெற்றார்கள்.    சிக்கராஜுக்கும், வீரராஜுக்கும்  ஒரே  வயதுதான்.  இப்போது  இருபத்து இரண்டு   வயதாகிவிட்டது.   இனிமேல்  எங்கே  படிப்பது?   ஆனால், பெரிய  வீட்டுப்  பிள்ளைகள்  ஆனதால்,  ஜமீன்தாரிடம்   சென்று ஒரு   ஜமீன்  உத்யோகம்  வாங்குவது   சுலபம்.    ஆனதால்,  வீரராஜு,    சிக்கராஜுவிடம்,  "  சிக்கா !  நாம் இருவரும், விஜயபுர   ஜமீந்தார் , பிரதாபருத்ர   ரெட்டியிடம்,  சென்று     அங்கு    அவரிடம்  நல்ல  வேலை  ஏதாவது  வாங்கிக்கொண்டு , முன்னுக்கு    வருவோம். கெட்டும் பட்டணம் சேர் என்று    சொல்லியிருக்கிறார்கள்.  இங்கு  இந்தப்  பட்டிக்காட்டுக் கிராமத்தில்,  நமது  தந்தையர்  சொத்தில்,    சோம்பேறியாகச்   அடிமைச் சுக வாழ்க்கை   வாழ்வது  எனக்குப் பிடிக்கவே   இல்லை.  நீயும்  என்னுடன் வா! "  என்றான்

     .சிக்கராஜு   வனிடம் , "  வீரராஜு!  இங்கு   நமக்கு என்ன  குறைச்சல்?  பட்டணத்துக்குப்  போய்க்    கண்டவனிடம்  பல்லைக்காட்டி,  கைகட்டி  வாய்பொத்தி வேலை   பார்ப்பதில் என்ன   கௌரவம்?   எங்க  அப்பாவுக்கு அதெல்லாம்   பிடிக்காது.  என்னை  எங்கேயும் போக  விடமாட்டார்.  எனக்கும்  இஷ்டமில்லை.  உனக்குத்தான்   தெரியுமே! நம்ம  ஊரின்  சிவராஜ  பந்துலுவின்   மகள்,   பங்கஜத்தைப் பார்க்காமல்  என்னால் ஒரு நாள் கூட இருக்க  முடியாது .   உன்னைப்  பார்க்காவிட்டாலும் எனக்குப்   பைத்தியம்   பிடித்துவிடும்.   அதனால், நீ எங்கேயும்   போய்விடாதே." என்றான் 

       " பங்கஜம், பங்கஜம்  என்று   எப்போது  பார்த்தாலும்  புலம்பிக்கொண்டே     இருக்கிறாயே!  நானும் அவளைச்  சில  சமயங்களில்  பார்த்திருக்கிறேன்!  அப்படி  ஒன்றும்  அவளிடம்  விசேஷமாக  இருப்பதாக எனக்குத்  தோன்றவில்லை..  நீதான்   அவளையே  நினைத்துக்கொண்டு புலம்புகிறாய்!  ஆனால்   அவள்  உன்னைத்   திரும்பிக்கூடப்   பார்ப்பது   இல்லை..   ஆண்கள்,   இவ்வாறு ஏதாவது  ஒரு   பெண்ணிடம்  விசேஷமாக  பிரியம்  கொள்வது    வெறும்  .அடிமைத்தனம் . அப்படி    இல்லாமல், சமூக   வழக்கப்படி,   நல்ல குடும்பத்துப்  பெண்ணின்  பெற்றோர்  நமது பெற்றோரை   அணுகி ஏற்பாடு செய்யும்  திருமணம் தான்,   ஆண்களுக்கு அழகு.  உன்னைப்   பார்த்தால்  எனக்குச்  சிரிப்புதான்   வருகிறது.   எதோ ஒரு   பெண்ணுக்காக உனது   வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே! .  கடைசியில் எந்தப்  பெண்ணும்,  தனது  கணவன்   சமூகத்தில்,  அந்தஸ்து  மிக்கவனாக இருக்க வேண்டும்  என்றுதான்    விரும்புவாள் . என்னுடன்   கிளம்பி வா! நீ   வராவிட்டாலும்   நான்,   நாளை கிளம்பிப் போகிறேன்.  அதனால்  உன்னை   மறந்து  விடுவேன் என்று  நினைக்காதே!  நான்   என்றும் உனது  உயிர் நண்பன்தான். என்றும்  நான் மாறமாட்டேன். " என்று  கூறினான்.

   " அப்படிச்    சொல்லாதே!   என்னுடைய  தகப்பனார்  முதலில் என்னை  பட்டணம்  எல்லாம்  போக  விடமாட்டார்.  அவர்    பேச்சை என்னால்   மீற  முடியாது.    மீறினால்,  எனக்கு  இந்த  சொத்து     பூராவும்    போய்விடும்.  செல்லாக்காசாக ஆகிவிடுவேன்.. இன்று  துணிந்து  பங்கஜத்துக்கு  ஒரு   கண்ணீர்க் கடிதம்    எழுதி,  அதை அவள்  வீட்டு   தாதி   மூலம்  கொடுக்கப்   போகிறேன்.  அவள்   மனம்  இளகி, எனக்கு   சாதகமாக  பதில்  அனுப்புவாள்  என்று    நம்புகிறேன்.  அவளும் கூட    வந்தால்,  நானும்  உன்னோடு  விஜயபுர ஜமீன்தாரிடம்  வேலைக்குச்  சேர்ந்து  கொள்கிறேன்..  நல்லதே    நடக்கும் என்று    நம்புவோம். என்னை   மறந்துவிடாதே என்று  மனமே  இல்லாமல்  நண்பர்கள்   இருவரும் பிரிந்தனர்.     
     
  அந்தக்  காலத்துக்   கிராமங்களில்,   பெரிய   இடத்து இளம் பெண்களிடம்,  ஆண்கள்  அவ்வளவு   எளிதாகப்  பேசிவிட முடியாது. சொல்லப்போனால் பார்க்கக் கூட  முடியாது.  இளம் பெண்கள் வீட்டுத்  திண்ணையில்  நின்று  சற்று  நேரம் போவோர்  வருவோரை  வேடிக்கை  பார்த்தால் கூட, உடனே     தந்தையும்  தாயும், சத்தம்  போட்டு '  அங்கே என்ன  பார்வை!   வீட்டுக்குள் போ  என்று   கடிந்து விரட்டி   விடுவார்கள்.  இருந்தாலும்,  கோவிலுக்குப்  போகும்போது, வரும்போது,   அல்லது ஏதாவது  நண்பர்கள்,   உறவினர்கள்  வீட்டு  விசேஷங்களில் பார்த்தால்தான் உண்டு. ஆனால் பேச முடியாது.  ..,  பங்கஜத்துக்கு,   தன்னை  சிக்கராஜு ராணியாக  நினைத்து  உருகுவது  நன்றாகவே  தெரியும். .
 
 பங்கஜம் வீட்டு    தாதி அக்கம்மா'அந்த   மிராசுதார் மகன்  சிக்கராஜு,  தேவையில்லாமல் நம்ம தெருவில்,  இங்கும் , அங்கும் அலைந்து,   நமது  வீட்டின் உட்புறம்  பார்த்து,  நீ   எங்கேயாவது  தென்படுகிறாயா  என்று   உற்று  உற்றுப்  பார்க்கிறான்.  உனக்குத்  தெரியாதா?  நீயும்  சற்று அவனை   எட்டிப்  பார்த்தால், என்ன? ஏன்  உள்ளே  ஒளிந்து  கொள்கிறாய்?" என்று   வேடிக்கையாக  கேலி   செய்வது வழக்கம்.  
 .  
  பங்கஜத்துக்கும் அவனைப்    பிடிக்காமல் இல்லை. இருந்தாலும்   பிடிப்பது வேறு, மணம்  புரிவது வேறு.  எத்தனையோ   ஊர்க்கட்டுப்பாடுகளை   மீறி, எந்தப்  பெண்ணும்,  எந்த   இளைஞனுக்கும்  திருமணம்  பற்றி  வாக்குத் தர முடியாது.  கொடுத்த  வாக்கை  மீறவும் முடியாது. எனவே   மிகவும்  எச்சரிக்கையாக   இருப்பது உயர்குடிப்  பெண்களின் இயல்பு.     பெரிய   இடத்துப் பெண்,  அவ்வளவு எளிதாக , யாரையும்  ஏற்றுக் கொள்வது   கௌரவக்குறைவு     என்பது அவளது    அபிப்ராயம்.   எனவே  அவன்  ரகசியமாக அனுப்பும்  கடிதங்களை  அவள்   படிப்பதே   கிடையாது.

      அன்று,    சிக்கராஜு   அனுப்பிய கண்ணீர்க் கடிதத்தை  தாதி  அக்கம்ம்மா   கொண்டுவந்து   கொடுத்ததும்., பொய்க் கோபம் கொண்டு  திட்டி ' இனிமேல் இந்த   மாதிரி  ஊர்க்காரன்  எவனாவது அனுப்பும்   கடிதத்தையெல்லாம் கொண்டுவந்து    கொடுத்தால், எனக்கு கெட்ட கோபம்    வரும்.. அப்பாவுக்குத்  தெரிந்தால்  என்னைக் கொன்றே  போடுவார்.  இதை  என்னிடம்  தராதே!  எடுத்துக்கொண்டு போய்  எவன்  கொடுத்தானோ அவனிடமே கொடு' என்று   கூறி   விட்டாள்

    அக்கம்மா   , அகன்றதும், அவளை  மீண்டும்  கூப்பிட்டு "இப்போது  மணி என்ன ? " என்று    கேட்டாள்..  அக்கம்மாவை  யாரும் ஏமாற்ற  முடியுமா?   அவள்  மணி  எல்லாம்    சொல்லாமல்,  சிக்கராஜுவின்  கடிதத்தை  பங்கஜத்திடம்  ஒரு நமட்டு  சிரிப்புடன் மீண்டும் கொடுத்தாள்.

     பங்கஜத்துக்கு   வெட்கம்   பிடுங்கித் தின்றது.   தனது  ஆசை, அக்கம்மாவுக்குத் தெரிந்து விட்டதே என்று அவமானமாகிவிட்டது.  உடனே அந்தக் , கடிதத்தைப்  பல துண்டுகளாகக்  கிழித்துத்    தரையில்   போட்டாள்..    அக்கம்மா   அவற்றை   எடுத்து அகற்றக்   குனிந்தபோது,  அவளிடம் " நீ    ஒன்றும் அவற்றை  அகற்ற   வேண்டியதில்லை.   நானே செய்து கொள்கிறேன்.  நீ  முதலில்   வெளியே போ! "  என்று   கடிந்து கொண்டு  ,அவள்  சென்றவுடன்,   கதவைப்   பத்திரமாக ,  உள்புறம் தாழிட்டுக்கொண்டு  அந்த   கடிதத் துண்டுகளைக்  கஷ்டப்பட்டு ஒன்று   சேர்த்து , சிக்கராஜு  என்ன   எழுதியிருக்கிறான் என்று   படிக்க   முயன்றாள். .  அங்கும்   இங்குமாக, கண்ணில்  பட்ட  இனிய  நேச  வார்தைகளைக்  கண்டு   " ,இந்த  கடிதத் துண்டுகளை  என் மனதில் வைத்து  பூஜிப்பேன்.   இதுவரை எனது   புறக்கணிப்பால்  காயமடைந்த அந்த   இதயத்தை எனது    அன்பெனும்  மருந்தால்  குணமாக்குவேன்  "என்று   பலவாறு சிறு   பெண்களின்  மொழியில் கண்ணில்  நீர்   கோர்த்து    மல்க,,  முதல்  தடவையாக சிக்கராஜுவின் கடிதத்திற்கு  ,  அனுகூலமாக   எனக்கும்    பிடிக்கும்  என்று   இரண்டே வார்த்தைகளில் ஒரு   பதில்  கடிதம்  எழுதி  , அதை அக்கம்மா   மூலமே  கொடுத்து  அனுப்பி   வைத்தாள்.. அந்தக்    கடிதத்தைப்  பார்த்தவுடன்,  சிக்கராஜு  ,  கடவுளையே நேரில்   கண்டது  போல  பரவசம் அடைந்தான்.
-------------------------------------------------
-   பங்கஜத்தின்   கடிதத்தைப்   படித்துப்   பரம  பரவசத்துடன் "  ஆஹா! ஆஹா! இனியது  நேசம்! இனியது ஜீவிதம் ! இனியது  இவ்வரி! '  என்று   சிக்கராஜு  இன்ப  லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது ,  அந்த  நேரம்  பார்த்து  அவனது  தந்தை , பூஜை  வேளையில்  கரடி  போல வந்து " என்ன   சிக்கா !  உன்  கையில்  அது என்ன  கடிதம்?  யார்  எழுதியது என்று  கேட்டார்..  சிக்கராஜு  அவசரம்  அவசரமாக  கடிதத்தை மறைத்துக்  கொண்டு  
" நம்ம  வீர  ராஜுதான்  எழுதியிருக்கிறான்.'   என்றான்.. 
 அதை  என்னிடம்  கொடு நானும்  படிக்கிறேன் 
 "என்ன" எழுதியிருக்கிறான்? "  என்றார்.
சிக்கராஜு   பயந்து போய் "  ஒன்றுமில்லை  அப்பா!  விஜயபுர ஜமீன்தார்   ருத்ர பிரதாப ரெட்டி   தன்னை  மிகவும்  அன்புடன்  நடத்துகிறார்.. நீயும்    என்னுடன் அங்கு  வந்து  இரு "  என்று  எழுதியுள்ளான் என்று   பதிலளித்தான்.

" நீ  என்ன   நினைக்கிறாய்?" என்றார் தந்தை 

போகவேண்டாம் என்றுதான்  அவர்  சொல்லுவார்  என்ற  தைரியத்தில்,"  நீங்கள் என்ன  சொல்கிறீர்களோ    அதுதான்  எனது சித்தம் என்று   பிரமாத  பவ்யத்துடன் சிக்கராஜு   பம்மினான்.
அவனது   துரதிர்ஷ்டம்!
 சிக்கராஜுவின் அப்பா மிராசுதார்  ரங்கராஜுவிடம் அப்போதுதான்,   அவரது  நீண்ட கால  நெருங்கிய  நண்பர் குண்டுராவ்  "  என்னப்பா!   ரங்கராஜு!! உன்  பையனை    பட்டணத்துக்கு   அனுப்பி ,நல்ல   உத்யோகம் பார்க்கச் சொல்லாமல்,   இங்கே  வெட்டியாகப்  பொழுதைக்  கழிப்பதை  எப்படி  பார்த்துக்கொண்டிருக்கிறாய்?  ஊர்  உலகம்  பற்றி  அவனுக்கு  அனுபவம்  கிடைக்க வேண்டாமா?  அவனது  சகா வீரராஜு கூட  , இப்போது  விஜயபுரி   சமஸ்தானத்தில்,  பெரிய   அதிகாரியாக இருக்கிறானாமே ! நீயும்  உன் பையனை   அனுப்பினால் என்ன ?” என்று   வத்தி  வைத்துவிட்டுப்   போய்விட்டார்.. 

 அதனால், ரங்கராஜு  கண்டிப்புடன் "  இதோ   பார். சிக்கா ! நீயும்  வீரராஜு போல  விஜயபுரி   ஜமீனிடம்  போய் வேலை    கேட்டு   உத்யோகம்  பார்த்துப்  பிழைக்கக்   கற்றுக்கொள்.  உத்யோகம் புருஷ லக்ஷணம் என்று   கேட்டதில்லையா?  மறு   பேச்சு  எதுவும்   பேசாமல்,  நாளை   ,மறுநாள்  அமாவாசை.- நல்ல நாள்.! வளர்பிறைநாளில் உடனடியாக    விஜயபுரத்துக்கு போய்   அங்கிருந்து  எனக்கு  விபரமாய் நல்ல   சேதி   அனுப்பு " என்று   சொல்லிவிட்டுப் போய்விட்டார்.     சிக்கராஜுவுக்கு  தனது  பணக்காரக் , கோபக்கார   அப்பாவிடம்  எப்போதுமே  பயம்.. அவனுக்கு  இப்போது   வேறு  வழி  ஒன்றும்   கிடையாது.  உடனே  அவன் தனது   பிரேம பங்கஜத்துக்கு     ரஹஸ்யமாக  ஒரு   அவசரச்  செயதியை  வழக்கம் போல  ,  அக்கம்மாவின்  மூலம் அனுப்பி,   அவசரமாக  அதிகாலையில்  கோவிலுக்கு   வரச்சொன்னான். 

 பாவம்   பங்கஜம் !    பதினைந்து  வயதே ஆன சின்னப்பெண்!

 தனது   இதயநேசன்   சிக்கராஜுவிடம்  முதல் முறையாகப் பேச ஒரு    சில  நிமிஷங்கள் மட்டுமே   அவளுக்குக்  கிடைத்தது..   நாணமும்,   இன்பமும்,   துக்கமும்,  கலந்த அந்த நிமிஷங்களில், அவர்கள்,  மோதிரம் மாற்றிக் கொண்டு   என்றென்றும்  மறவாது  இருப்போம் என்று   கோவில்  சாமி சாட்சியாக,  அக்கம்மா சாட்சியாக  சத்யம் செய்துகொண்டு ,  ரஹஸ்யமாக  . .பிரிந்தார்கள் 

 அடுத்த நாள்  அமாவாசை நல்ல  நாளில் சிக்க ராஜு  ,  விஜயபுர  ஜமீனில் போய்  சேர்ந்தான்.       
  21-3-2020  10am
  விஜயபுர  ஜமீன்தாருக்கு , உண்மையிலேயே வீர ராஜூவைப் பிடித்துப் போய்விட்டது.  வீரராஜு  கிராமத்துப் பையனாக  இருந்தாலும்,  இலக்கியம், வரலாறு, நாட்டுநடப்பு,  போன்ற  விஷயங்களில், தேர்ந்தவனாக இருந்தான்.  எனவே ஜமீன்தார்   அவனை  அருகிலேயே  வைத்துக்கொண்டு   ஆதரித்தார்.  ஜமீன்தாருக்கு  ஒரே  ஒரு பெண்.   சிறந்த அழகி. நல்ல குணம்  வாய்ந்தவள். அவள் பெயர்   ரத்னதேவி   திருமண வயது  வந்த பெண்.  ஜமீன்தாருக்கு   அவளை , சன்னரெட்டி என்ற  பணக்காரப்   பிரபுவுக்கு மணம்   முடிக்கவேண்டும்  என்று   ஆவல்..  ஆனால், சன்ன ரெட்டி  அவ்வளவாகப்  .படிப்பில்லாதவன்.  கொஞ்சம் உளறுவாயனும்  கூட!.  பார்ப்பதற்கும்  நன்றாக இருக்க  மாட்டான்.!   அதனால்,  ரத்னாவுக்கு அவனைப்  பிடிக்கவில்லை.   

 வீரராஜு  நன்றாகப்   படித்தவன். நன்றாகக்  பேசுவான். சிறு வயது   முதலே வீர   விளையாட்டுகளைப்  பழகியவன். நல்ல  உயரம். களையான .முகம். சிறந்த  உடல்கட்டு.  அப்பாவுக்கு  பிடித்த  உதவியாளன். வேறென்ன  வேண்டும்?  எனவே   ரதனாவின் மனம்  அவன் பால்  ஈடுபாடு கொண்டுவிட்டது.  ரத்னா அழகி    என்பதால்,   வீரராஜுவும்,  அவள்   மீது  ஆழ்ந்த  நேசம்  கொண்டுவிட்டான். 
ஜமீன்தாருக்குத் தெரிய  வந்தால், கண்டிப்பாகத்  தடை  போடுவார் என்று     அறிந்து ,  அந்த இருவரும், ஜாடை மாடையாகப்  பேசிக்கொண்டு, சமயம்  வாய்க்கும்போது, எப்படியாவது,  விஜயபுர ஜமீன்  அரண்மனையிலிருந்து தப்பிச்  சென்று  பித்தபுரம்  ஜமீனுக்குப் போய்      திருமணம்    செய்துகொண்டு   வாழத திட்டம்  போட்டுக்   கொண்டிருந்தனர்

        ஒருநாள், ரத்ன தேவியும், வீரராஜுவும்,  சன்னரெட்டியும்  அரட்டை அடித்துக் கொண்டிருந்த  போது  ,ஜமீன்தார்  ருத்ர பிரதாப ரெட்டி  அங்கு    வந்து,  தனது  நண்பர்  ரங்கராஜு  தனது  மகன்  சிக்க ராஜூவை  அரண்மனை  உத்யோகத்திற்கு  அனுப்பி   வைத்துள்ளார். இன்னும்  சிறிது நேரத்தில்   இங்கு வருவான் .  நீங்கள் அவனுடன்  இனிமையாகப்  பேசி  எல்லோரும் பிரியமாக  இருங்கள். என்று    கூறினார்.  அது  கேட்டு வீர   ராஜுக்கு  இரட்டிப்பு  சந்தோசம் ஆகிவிட்டது .

 "   பிரபுவே! சிக்க ராஜு,   எனது  நீண்ட  கால  ஆப்த  நண்பன்.  என்னைவிட, நிறையப் படித்தவன்.   நல்லவன்.. அவனைப்   பிரிந்து வந்ததில்   எனக்கு சிறிது  மனக்  குறை இருந்தது. இப்போது  மிகவும்  மகிழ்ச்சியாக   உள்ளது."   என்றான்.  ஜமீன்தாரும்  அதுகேட்டு  " அப்படியா! மிகவும்   நல்லது!" என்று   கூற அந்த  நேரத்தில்,  சிக்க ராஜு  அங்கு  வந்து  சேர்ந்தான். 

 கிராமத்துப்  பையன்.!  நகர்ப்புற   அதிலும்,   ராஜகுல  அழகிய இளம் பெண்டிரைப்   அதுவரை  பார்த்திராதவன்,, அதனால், சிக்கராஜு ,  ரதனாவைப  பார்த்த  உடனேயே   ஏதோ தேவலோக அப்சரஸைப் பார்த்ததுபோல  கிறங்கிப் போனான்  .
 
   சிறிது   நேரம் கழித்து,  சிக்கராஜுவும், வீர   ராஜுவும் மனம்   விட்டுப்  பேசிக்கொண்டனர். " சிக்கா!  உன் இதயஜோதி  பங்கஜம் எப்படி இருக்கிறாள்?  உன்னுடைய பிரேம லிகிதத்திற்கு  பதில்  எதுவும் போட்டாளா  அல்லது  வழக்கம்  போல  கிணற்றில்  கல்லைப  போட்டது  போல்  இருக்கிறாளா? " என்று    கேட்டான்.

    உனக்குத்  தான் இந்தப பிரேம   விஷயங்கள்  எல்லாம்  பிடிக்காதே!  நான்  சொன்னால்  நீ புரிந்து  கொள்ள   மாட்டாய்.'   என்றான் 
 சிக்க ராஜு.

   ' அது நான் இங்கு வந்து ,   ரத்னாதேவியைப் பார்ப்பதற்கு முன்  ! இப்போது  நான்   முழுதும் மாறிவிட்டேன்!   உன்னை எப்போது   பார்த்தாலும்,  பங்கஜம், பங்கஜம்  என்று    புலம்புகிறாயே!  என்று   கேலி செய்வேன்.  இப்போது  நான்  உன்னைப்போலவே  'ரத்னதேவி  ,  ரத்னதேவி  'என்று  சதா  சர்வ  காலமும் அவள்  நினைவாகவே  இருக்கிறேன்.  என்னை அவள்   பார்த்து,  சிறிது  புன்னகைத்துப்  பேசினால், நேரே  ஸ்வர்கத்துக்கே போகிறேன்.  ஆனால், என்னை  அவள்  பார்க்காவிட்டால்,  என்னிடம்  பேசாவிட்டால்,   அதைவிட  நரகமே தேவலை  என்று   பைத்தியம்   ஆகிவிட்டேன்.   பெண்ணிடம் நேசம்  கொள்வது   நம்மை  அடிமையாக்கும் என்று  நான்   அன்று  கூறியது  இன்றும்   சரிதான். ஆனால்,  அந்த   நேசத்திற்கு  எதிரொலி    இருந்தால்,   அதைவிட  ஆனந்தம்   ஏது?  இல்லாவிட்டால் அந்த       நிராசைக்கு  நிகரான  நரகம் ஏது! ..நல்ல   வேளையாக நான்   பிழைத்துக் கொன்டேன் . ரத்னாவும் என்னை  ஏற்றுக் .கொண்டு விட்டாள்   ஜமீன்தாருக்கு ரதனாவை  சன்னரெட்டிக்கு திருமணம்  செய்து   கொடுப்பதில் தான்  இஷ்டம்.  எனவே  ,  நானும் ரத்னாவும்,  நாளை இரவு  அரண்மனையிலிருந்து  தப்பிச்   செல்ல திட்டம்    போட்டிருக்கிறோம்.  ரத்னாவின்  அறையை , இந்த  ஜமீன்தார்   தினமும் இரவில்   பூட்டிவிட்டு   சாவியைத்  தன்னிடம் எடுத்துக் கொண்டு  போய்விடுகிறார்.   அதனால், நான்  ஒரு   கயிற்று  ஏணி  தயார் செய்து  இன்று   நடுநிசியில்,  அதுவழியாக ரதனாவை   இறங்கி வரச்    சொல்லி,   அவளுடன் , பித்தபுரம்   போக   உள்ளோம். அவளும்   ஒப்புக்கொண்டு  கடிதம்  எழுதிக்   கொடுத்துள்ளாள்.   நீ   இதெல்லாம் உன்  மனதிற்குள்  வைத்துக்கொள். பரம   ரகசியம்.  யாருக்கும்  தெரியக்கூடாது" என்றான்.

   நம்புவது  கடினமாக  இருந்தாலும், சிக்க ராஜு  இப்போது ரத்னாவைப்   பார்த்தது   முதல்,  ஒரே நாளில் மிகவும்   மாறிவிட்டான். பங்கஜம்  பற்றிய நினைவு   அறவே   இல்லை . எதோ ஒரு  வெற்றுக்  கனவு  என்று  மறந்து   விட்டான்.  இப்போது  அவன்  வீரராஜுவின்  உயிர்  நண்பனும்   இல்லை.  பொறாமை   மட்டுமே  அவன் மனதில்  நிறைந்திருந்தது.  அதன் விளைவாக, அவன்  நேராக ஜமீன்தார் ருத்ரப்ரதாப  ரெட்டியிடம்  போய் வீரராஜுவின் திட்டதைப் பற்றிச்   சொல்லிவிட்டான்.  நிறைய  முஸ்தீபுகளுடன்,   "  இளம்    வயது முதல்  வீர ராஜு  எனது உயிர் .  நண்பன்தான். இருந்தாலும்,  இப்போது  அவன்   செய்ய  இருக்கும்  காரியம் சரியல்ல!  தங்களிடம்  தெரிவிப்பது எனது   கடமை  என்பதினால்இதைக் கூறுகிறேன். தாங்கள்  அவனை   மன்னித்துவிடுங்கள் .  " என்று   போலி வார்த்தைகள்   பல  கூறினான்.  

 ஜமீன்தார்  அவனை  மிகவும்  மெச்சி  இப்படியல்லவா   இருக்கவேண்டும்!   நன்றி  மறந்த அவனை  விட  நீ தான் மிகவும்  நல்லவன் .   நான் தவறு   ஏதும்  நடந்திடாமல்   . பார்த்துக்   கொள்கிறேன்.  நீ   கவலைப்படாதே! என்று   கூறி சிக்கராஜுவை    அனுப்பிவிட்டு,  அன்று  இரவு  வீர   ராஜூவை  தன்னிடம் வரச்  சொன்னார்.  "  வீரா!  எனக்கு  ஒரு  பெரிய   பிரச்னை.  நீதான் .  வழி காட்டவேண்டும். எனக்கு   ஒரே   பெண்தான். அவளுக்காகத் தான்  நான்   மறுமணம்  செய்துகொள்ளாமல்  இத்தனை  ஆண்டுகள்  தனித்து  இருந்தேன்.   ஆனால், என்  பெண்  இப்போது  என்  வயதையும்    மதிப்பதில்லை. நான்   சொல்வது  எதையும்   கேட்பதில்லை.  இவள்  எப்படியும் போகட்டும்  என்று   நான் மறுமணம்  செய்து   கொள்ள  நினைத்து ஒரு  பெண்ணைப்   பார்த்து வைத்திருக்கிறேன்.  ஆனால்,  அவளுக்கு  என் மேல்   துளியும்   இஷ்டமில்லை. அவளைக் கடத்திக்   கொண்டுவருவது  ஒன்றுதான் வழி  என்று  தோன்றுகிறது.   வீட்டிற்குள் போக  முடியாது.  பலத்த  காவல்.ஜன்னல் வழியாகத்தான்   அவளைக்  கொண்டுவர முடியும்  .உன்   யோசனை  என்ன?"   .என்றார்

  வீரராஜு  அப்போது  குழப்பத்தில்,  "  அது  ஒன்றும்  கஷ்டம்  இல்லை. மேலங்கிக்குள் ஒரு கயிற்று    ஏணியை   மறைத்துக்    கொண்டுபோய்   ஏணியைப்போட்டு  அது   வழியாக அவளைக் கீழே  கொண்டுவந்து  விடலாம் என்று    உளறிவிட்டான். 

 'இது என்ன  உனது   மேலங்கிக்குள்  உள்ள  பொருள்' என்று  ஜமீன்தார்   அவனது  மேலங்கியைப் பிடித்து இழுத்தவுடன், வீர  ராஜு   அங்கு  மறைத்து  வைத்திருந்த்  கயிற்று    ஏணியும், ரதனாவின்  கடிதமும் கீழே    விழுந்தன.  கடிதத்தை ஜமீன்தார்  படித்துவிட்டு "   'ஓஹோ!   அப்படியா உங்கள்  திட்டம்!   என்னை அவ்வளவு   எளிதில் ஏமாற்ற  முடியுமா?   இந்த நிமிஷத்தில்  இருந்து நீ  எனது  ஜமீன்   எல்லைக்குள்  இருக்கக்கூடாது.  உடனே வெளியேறு' என்று   நடு  நிசியில் அவனை   விரட்டி விட்டார்

    நொறுங்கித் தூள் தூளாகிப்   போன    கனவுகளுடன், வீர  ராஜு  காட்டு  வழியில் நொந்த  மனதுடன்  சோர்வாக  நடந்து போனபோது  ஒரு  கொள்ளைக்  கூட்டம் அவனை  வளைத்துப்    பிடித்துவிட்டது.  
 " உன்னிடம் உள்ள   பணப்பையை  உடனே  கொடு  " என்று   கொள்ளையர்கள் அவனை     மிரட்டினார்கள். " பணமும் இல்லை.   பையும் இல்லை. நான்   அணிந்திருக்கும்  ஆடை  தவிர  என்னிடம்  எதுவுமே இல்லை ' என்றான்  வீர ராஜு  .  

    'உன்னைப்  பார்த்தால், பெரிய   பணக்கார வீட்டுப்  பிள்ளை போல   இருக்கிறது.  உடம்பும்  பலசாலியாக   இருக்கிறாய். பின்   எப்படி இந்த  நடு  இரவில் நடுக் காட்டில்,   இப்படித் தனியாகத் திரிகின்றாய்' என்று  கொள்ளையர்கள்  கேட்டபோது, ' என்னை  ஜமீன்தார்   நாடு  கடத்தி விட்டார்.  என்னுடைய  ஊருக்கும் இந்த   நிலையில் நான் திரும்ப முடியாது.'   என்றான்.  ' எங்களுக்கு உன்னைப்  போல  ஒரு  பெரிய   வீட்டுப்  படித்த பலசாலித்  தலைவன்   வேண்டும். நீதான்   இனி  எங்கள் தலைவன்  .  சரி என்று    சட்டென கூறு.  நீ  என்ன     கட்டளை இட்டாலும்   அப்படியே   நிறைவேற்றுவோம். . நாங்கள் இருக்கும்  இந்த இடம்   உனக்குத்  தெரிந்து   விட்டது.  எனவே   மறுத்தால் உன்   கதையை முடித்துவிடுவோம்.'    என்றார்கள்.

" சரி.  ஆனால்   நீங்கள்  ஒருபோதும் பெண்களைத்   துன்புறுத்தி நடத்தக் கூடாது.   அதுபோல எளிய  ஜனங்களையும் கனிவாக நடத்த வேண்டும் " என்றான்..  அதற்கு  அவர்கள்   சம்மதித்து,   நாங்கள் "கொள்ளைக்காரர்கள்,     பெண்பித்த்ர்கள்   அல்ல. எங்களுக்கு   வேண்டியது  பணம்.  ஏழை  பாழைகளைப்   பிடித்து  வைத்து எங்களுக்கு  என்ன  கிடைக்கப் போகிறது ? பெரிய  பணக்காரன்   எவனாவது வரும்போது,   அவனை  எப்படி   ஏமாற்றி  மடக்குவது என்று  எங்களுக்கு   சொல்லிக்கொடுக்க உன்னைப்  போல  ஒரு   நல்ல  தோற்றம் கொண்ட புத்திசாலித்தலைவன்  வேண்டும் . இனி  நீதான்   அந்தத் தலைவன்  .நீ    கீறும் கோட்டை  நாங்கள்   தாண்ட   மாட்டோம் " .என்று   சத்தியம் செய்தனர். அன்றிலிருந்து  வீரராஜு   காட்டு ராஜு    ஆகிவிட்டான். புத்திசாலித்தனமாக ,  பெரும்  பண  மூட்டைகளை  வழிமறித்துக்   கொள்ளையடித்து,   அவனும், அவனது   பரிவாரமும்   சுகமாகப் பொழுதைக்  கழித்தனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள்  கொள்ளையடித்த பணத்தை  வைத்து,     கஷ்டப்படும் ஏழை  எளியோருக்கு  நிறையவே  உதவிகள் செய்து,  மக்களிடம் நல்ல  பெயரும் பெற்று  விட்டார்கள். எனவே   அவர்களைப்  பிடிப்பது  ஜமீன்   அதிகாரிகளுக்கு   மிகவும்  கடினமாகிவிட்டது. 
-----------------
 10pm   21-3-2020
------------------------

     சிக்கராஜுவிடமிருந்து தகவல்  ஒன்றுமே  வராதது   குறித்து,  பங்கஜம்  பதறிப்போனாள் .  தாதி  அக்கம்மாவைத் துணைக்குக்  கூட்டிக்கொண்டு , அவள்   விஜயபுரத்திற்கு. போக முடிவெடுத்தாள்  போகும்  வழியில்  .பாதுகாப்பாக  இருக்க   ஒரு ஆண்   போல வேஷம் போட்டுக்கொண்டு    அக்கம்மாவுடன்,  , பங்கஜம் விஜயபுரத்திற்கு மதியம் போய்ச  சேர்ந்தாள் .  அங்கு ஒரு   கௌரவமான  விடுதியில்   தன்னுடைய பெயர்  சிவராஜு  என்றும், தன்னுடன் வந்துள்ள  பெண்மணி  தனது அடுத்தவீட்டு அம்மாள் என்றும்     விஜயபுரத்தை பார்க்க்க விரும்பித் தன்னுடன்   வந்துள்ளார்  என்று  சொல்லி  விடுதியில்  தங்கி,   விடுதியின்  நிர்வாகியிடம் சிக்கராஜு  பற்றி விசாரித்து பேச்சுக்  கொடுத்தாள். .

 விடுதியின்  நிர்வாகிக்கு  சிவராஜூவின்  முகமும்  பேச்சும் பிடித்து   இருந்தது.  எதோ   பணக்கார வீட்டுப்   பையன் என்று    நினைத்துக்கொண்டார்.     ஆமாம்.. சிக்கராஜு  என்று    ஒருவர்  ஜமீன்   வேலையில்  சேர்ந்திருக்கிறார் என்று   நானும்  கேள்விப்   பட்டேன் .  உங்களுக்கு அவரிடம் என்ன கேட்க வேண்டும்?  "என்றார் … “   அவரிடம்   நான்  வேலைக்குச் சேர வேண்டும். "    என்றான் சிவராஜு. " நாளை   உங்களை அவரிடம்   கூட்டிக்கொண்டு   போகிறேன். கவலைப்   படாதீர்கள்.  இப்போது   நீங்கள்  உணவருந்தி  விட்டு  ஓய்வெடுங்கள்.  இன்று  மாலை  நான் உங்களை  அரண்மனையைச் சுற்றிப்பார்க்க அழைத்துச்  செல்கிறேன். .என்றார் .   


          அதுபோலவே  அரண்மனையில், சபை  மண்டபம்,  தோட்டம்,  குளியல்குளம்,  விருந்து அறை , கோவில்,  நந்தவனம்  பூஜை மண்டபம்  எல்லாம்   பார்த்துவிட்டு  ராஜ குடும்பத்து  ஸ்த்ரீகளின்   உப்பரிகை  மாடத்தையும் தூரத்தில்   நின்றவாறு பார்த்துக்கொண்டு   இருந்தார்கள். 

 அப்போது எங்கிருந்தோ  சிக்கராஜு,  தன்னுடன்   நான்கைந்து  வாத்திய இசைப் பையன்களைக் கூட்டிக்  கொண்டுவந்து   அவர்களுடன்,  ராஜகுமாரியின்  உப்பரிகைக்கு   கீழே  நின்று   கொண்டு, ரத்னதேவியை மறைமுகமாக   மனதில்  கொண்டு  , உப்பரிகையை பார்த்துக்கொண்டு  பிரேம கீதங்கள்   பல   பாடினான்.  சங்கீதம் பயின்றவன்  அல்லவா!  நன்றாகவே   பாடினான்..   சிறிது  நேரத்தில்   இளவரசி  ரத்தேவி உப்பரிகை   மாடத்தில்  தோன்றி  'சிக்கராஜுவிடம்  கோபமாக "  இது என்ன  கூச்சல்?  நாராசமாகயிருக்கிறது.   நண்பருக்கும் , தன்னை நம்பியிருக்கும்  பெண்ணிற்கும்   துரோகம் இழைக்கும் ஆட்களுக்கு   பிரேம  கீதம்  ஒரு  கேடா?  வெளியே  சென்று  தெருமுனையில் உங்கள்  கழுதைக்கனைப்பைத்  தொடருங்கள் "  என்று  கடுமையாகத் திட்டி,   சிக்கராஜுவை   விரட்டிவிட்டாள் .  ஆனால்  அவனுக்கு ஆசை வெறியில்,   வெட்கம், மானம்,  ரோஷம்  எல்லாம்  போய்விட்டது.
  .

   சிக்கராஜுவின்   இந்த துரோகம்,  பங்கஜத்தை   மனம் நோகச்  செய்தது.   இருந்தாலும்,  பேரழகி   இளவரசி ரத்னதேவி   சிக்கராஜுவுக்கு  சாதகமான  பதில்  எதுவும்  தரவில்லை  என்பதில்  நிம்மதி  அடைந்தாள்.. அன்று  இரவு  வெகு நேரம்  அவளால்  உறங்க முடியவில்லை.  
---

அடுத்த நாள்   காலையில்  விடுதியின்   அதிபர் , சிவராஜூவை  அழைத்துக்கொண்டு ,   சிக்க ராஜூவைப் பார்த்துப்  பேசி, சிக்கராஜுவின்  வேலையாளாக ,  சிவராஜூவை   அமர்த்தினார்.  அழகான   பையனை சிக்கராஜுவுக்கு   பிடித்திருந்தது. ரத்னா  தேவிக்கு  தான்  படித்திருந்த  இலக்கியம்,  கவிதை  எல்லாம்   பயன்படுத்தி, கடிதம்  எழுதி   சிவராஜுவிடம்    கொடுத்து  அனுப்பினான். போதாக்குறைக்கு , பேதைப்பெண்  பங்கஜம்  அவனை நம்பி  அவனுக்கு,  அணிவித்திருந்த  மோதிரத்தையும்  கழட்டி,   அதை  ரத்னதேவிக்கு  கொடுத்து    அனுப்பினான்.. என்ன  செய்வது?  வேறு வழி  இல்லாமல் பங்கஜம் ( சிவராஜு) ரத்னா தேவியிடம்  கடிதத்தையும், மோதிரத்தையும்   கொடுத்துவிட்டு , ரத்னாதேவி   அவற்றை  ஏற்காமல்  இருக்க  தெய்வத்தை    வேண்டிக்கொண்டு,  படபடக்கும்  இதயத்த்தோடு, ரதனாவின்  பதிலுக்கு   காத்திருந்தாள்.     


   ரத்னதேவிக்கு ஓரளவு,   சிக்கராஜுவின்  பழைய கதை    தெரியும்.  வீர  ராஜு அவளிடம்  லேசாக  கூறியிருந்தான் .   அவன்  கொடுத்து  அனுப்பிய  கடிதத்தை  அவள்  படிக்கவே   இல்லை. பையா!  எனக்கு அவரைப்   பிடிக்கவில்லை.  ஏற்கனவே  அவரது  ஊரில்  பங்கஜம்  என்ற ஒரு   பெண்ணுக்கு  திருமணமோதிரம்     கொடுத்தவர் என்று  வீர  ராஜு  என்னிடம்   கூறியிருக்கிறார்..   இந்தக் கடிததையும்  மோதிரத்தையும்  அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,   இனிமேல்  இதுபோலெல்லாம் தொந்தரவு  செய்யக்  கூடாது என்று  சொல்லிவிடு.   என்றாள்    பங்கஜத்திற்கு  நிம்மதி   ஆகிவிட்டது.  எனக்கும்   அந்தப் பெண்ணைத் தெரியும்   மிகவும்  நல்ல   சிறுமி. வெகுளிப்  பெண்  இவர்தான்  அவளுக்கு  ஆசைகாட்டி  மோதிரம் கொடுத்து   இப்போது  மோசம்  செய்கிறார்.  என்றாள்.   ரத்னாதேவி  அப்போது ' அந்தப்  பெண்  எப்படி  இருப்பாள்?’  என்று    கேட்டாள்.  இதே உயரம், இதே   நிறம், இதே  முகம்! என்னைப்  போலவே இருப்பாள்.   என்றாள்  பங்கஜம் ( சிவராஜு_ ) , '    ‘ ‘அப்படியா! உன்னைப்  போல  இருக்கும் பெண்  மிகவும்   இனிய  அழகான பெண்ணாகத்  தானே இருப்பாள்!  அவளுக்குத் துரோகம்   செய்ய  இந்த  ஆளுக்கு எப்படி   மனது   வந்தது!   நீ மிகவும்    நல்லவன். பங்கஜத்தைப்  பற்றி  நல்லதாகப்  பேசுகிறாய். எனக்கு  மிகவும்   பிரியமாக   இருக்கிறது.  எனது அன்பளிப்பாக இந்த   பணப்பையை வைத்துக்கொள்   என்று   சிவராஜுவிடம் கொடுத்து  அன்பாகப் பேசினாள் . இந்த  இனிய    வார்த்தைகள், பங்கஜத்தின்  நொந்த  மனதுக்கு மிகவும்  ஆறுதலாக   இருந்தன.   எப்படியும், சிக்கராஜுவை  மணம் செய்து  கொள்ளலாம் என்ற   நம்பிக்கை  பெற்றாள்

------
   அன்று  இரவு வருவதாகச் சொல்லியிருந்த வீர  ராஜூவைக் காணாமல், ரத்னதேவி  , அவனுக்கு   என்னவோ ஏதோ   அபாயம் என்று  மிகவும்  கவலை   அடைந்து, எப்படியும்  அவன்  பித்தபுரம்தான்  போயிருப்பான் என்று    நினைத்து,  அவளுக்கு   நம்பிக்கையான ஒரு   முதியவர்  சுப்புசர்மாவைத்  துணைக்கு அழைத்துக் கொண்டு,   துணிந்து அரண்மனையை விட்டுத்   தப்பி ,   பித்தபுரம்  நோக்கிப் பயணமானாள்    போகும்  வழியில்தான் கொள்ளைக்காரர்களின்  அடர்ந்த   காடு. ஒரு  கொள்ளைக்காரன் அவளைப் பிடித்துக் கொண்டுவிட்டான்.   சுப்புசர்மா  அவனிடம் கெஞ்சி  தப்பித்து   சென்றுவிட்டார்.  "   பெண்ணே   !  நீ    படப்படவேண்டாம். எங்கள்  தலைவர்  பெண்களை  மரியாதையாக    நடத்தவேண்டும் என்று   உத்தரவிட்டுள்ளார். நீ   உன்னுடைய  நகைகளை  மட்டும்  கழட்டிக்   கொடுத்தால்   போதும்.  அதுகூட எங்கள்  தலைவரிடம்தான்  தரவேண்டும். நீ  தாமதிக்காமல்  என்னுடன்  உடனே  வா!  நான்  அவரிடம் உன்னைக் கூட்டிச் செல்கிறேன் '  என்றான்.

      இதற்குள்,  சிக்கராஜு   அரண்மனையில்   ரத்தேவியைக்  காணாமல்,அவள்  எப்படியும் பித்தபுரம்   நோக்கித்தான் , வீர   ராஜூவை  சேர்ந்து கொள்ள போயிருப்பாள் என்று    கணித்து,  தனது  உதவிப்பையன்  சிவராஜூவையும் ( பங்கஜம்)   கூட்டிக்கொண்டு  சரியான நேரத்தில்   அங்கு  வந்து கொள்ளைக்காரனை  ,விரட்டிவிட்டு , மீண்டும் மீண்டும்   ரத்னதேவியிடம்  நேச வார்த்தைகள்   பேசினான். 

          பங்கஜத்திற்கு  நம்பிக்கை  போய்விட்டது.   தன்னைக்  கொள்ளையனிடம்  இருந்து  காப்பாற்றிய சிக்கராஜுவை   நன்றிக்காக  ரத்னதேவி  ஏற்றுக்கொண்டுவிடுவாள்,  தனது   பிரேமை  வெறும்  கானல் நீராகப்  போகிறது என்று   நினைத்த  கணத்திலேயே அவள்  மனம்   உடைந்து  மயக்கம்  அடைந்து  கீழே   சரிந்தாள்..  அவளை நினைவுக்கு   கொண்டு வருவதில், ரத்னதேவி ,  சிக்கராஜு  கவனம் திரும்பியது.    அதற்குள், ஓடிப்போன  கொள்ளையன் 'ஒரு   செல்வந்தப் பெண்  காட்டிற்குள்   வந்திருக்கிறாள் என்று சொல்லக் கேட்டு  யார்  அந்தப்  பெண்  என்று   காண வீர  ராஜு    அங்கு   வந்து சேர்ந்தான்.
 அவன்   வரும்போதுதான் , சிக்கராஜு  ,ரத்னாவிடம்   ப்ரேம   வார்த்தைகளை  உளறிக்கொண்டு   இருந்தான். வீர  ராஜு   உண்மையான  நண்பன்.  எனவே ' ‘’சிக்கா   ! நீ  இந்த  அளவுக்கு  பங்கஜத்தை  மறந்து ,  ரதனாவை  விரும்பினால்,  நீயே இவளைத் திருமணம் செய்து  கொள்   உனது  நட்பைவிட எனக்கு   எதுவுமே  முக்கியமில்லை ‘’' என்று  அவன்  பங்குக்கு   உளறினான். 

 சிக்கனுக்கு இப்போது  மிகவும்    வெட்கமாகிவிட்டது. இவ்வளவு  அருமையான  நண்பனுக்கு  துரோகம் செய்ததற்காகக்  உள்ளபடியே மனம்   வருந்தி  மன்னிப்பு  கேட்டான். 

   மயக்கம்  தெளிந்து  எழுந்த (  பங்கஜம்) ' ரத்னா  தேவியிடம் ‘' குழப்பத்தில் மறந்து போய்   விட்டேன். இந்த மோதிரத்தை  எனது   எஜமானர் சிக்கராஜு  தங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று   சொல்லி , அன்றொருநாள் சிக்கராஜு  அவளுக்கு   அளித்திருந்த  மோதிரத்தைக் கழட்டி  , ரத்னாவிடம் கொடுத்தாள்   சிக்கராஜுவுக்குத்   திகைப்பாகிவிட்டது. 'இது  நான்  பங்கஜத்துக்குக்  கொடுத்த மோதிரம்  ,  உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று  கேட்டான். ' பங்கஜம் தான்  அதைக் கொடுத்தாள்.   இப்போதும்  அதே பங்கஜம்தான்  உங்கள்து  புதிய நேச  ராணிக்கு  அதைத்  தருகிறாள்' என்று   கூறி சிக்கராஜுவின்   துரோகத்தை இடித்துக்   காண்பித்தாள்
--     
   சிவராஜூவை உற்று   நோக்கிய  சிக்கராஜு  ,  அவள்தான் பங்கஜம்  என்று   உணர்ந்து   கொண்டான்.  தன்னுடன்  சேர்ந்து   இருப்பதற்காக, இவ்வளவு  அபாயங்களைக்   கருதாது  தன்னை  உண்மையிலேயே  நேசிக்கும்   பேதைப்பெண்  பங்கஜத்திற்கு  துரோகம்  செய்ய  நினைத்ததற்கு  மிகவும்  வெட்கமடைந்து ,மனம்   திருந்தி பழைய  சிக்கராஜுவாக  முழுவதும்  மாறிவிட்டான்.   

       தன்னை  இவ்வளவு   எளிதாக தனது   நண்பனுக்குத்  தாரை வார்க்க நினைத்த  வீரராஜு   மேல்  ரத்னதேவிக்கு  சிறிது   மனத்தாங்கல் தான்! .  எனினும்  அவன்  தனக்கு    எதுவும்  துரோகம்   செய்யவில்லை .  நான்தான் அவன் மீது   விருப்பம் கொண்டு   இங்கு  வந்தேன்.  அவன்  உயர்ந்த  குணம் கொண்டவன்தான்  என்று  அவள்   சமாதானமாகிவிட்டாள்.

   அந்த  நேரத்தில்,   ஜமீன்தார் ருத்ர பிரதாப ரெட்டி, அவரது   சிநேகிதர்  சன்ன ரெட்டியோடு   அங்கே வந்தார்.  சன்ன ரெட்டி,  ரத்னாவின்  கையைப்பிடிக்க வந்து "  இவள்  எனக்கே   உரியவள்.  இவளுடைய தந்தை என்னைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்துள்ளார்"  என்று   கூறினான்,  அப்போது   வீர  ராஜு  " ஜாக்கிரதை!   எவனாவது  ரத்னாவைத்  ,  தொட நெருங்கினால் , எனது   வாளுக்கு  இரையாவது  நிச்சயம் .  ஓடிப்போய்  உயிர் பிழைத்துக கொள்என்று    எச்சரித்தான். உடனே   சன்னரெட்டி ' 'தப்பித்தோம்! பிழைத்தோம்' என்று  .  ஓடிப்போய்விட்டான்.   

   ஜமீன்தாருக்கு  சன்னரெட்டி மீது  மிகவும்   வெறுப்பாகிவிட்டது . " இப்படி ஒரு  கோழைப்  பயலுக்கு போய்  எனது   செல்வ  மகளை    அளிக்கும்   தவறைச்   செய்ய   இருந்தேன்!.  வீர ராஜு! நீ  தான் உண்மையான  வீரன்..!  எனது   மகள்   உன்னை  சரியாகத்தான்  தேர்வு   செய்துள்ளாள். நீ   அவளை மணம்   புரிந்துகொள்ள மனமார சம்மதம்  தருகிறேன். நீ  அவளை   மணந்து எனது   மருமகனாக  இருந்து இந்த விஜயபுரி   ஜமீனின்  நிர்வாகத்தை  ஏற்றுக்கொள்  " என்று  கூறினார்.

   உடனே  வீர  ராஜுவும்,   ரத்னதேவியும்,    ஜமீன்தாரின்  பாதங்களைப் பணிந்து   வணங்கி,  அவரது   ஆசீர்வாதம்  பெற்று மனம்  மகிழ்ந்தார்கள்.

 சிக்கராஜுவும்,  பங்கஜமும்  அதுபோலவே , ருத்ர  பிரதாப  ரெட்டியை வணங்கி, அவரது   ஆசி   பெற்றனர். இவ்வாறு   இரண்டு  பெரிய  வீட்டுப்  பிள்ளைகளின்  மனோரதம் இனிதாக   நிறைவேறியது.

   இந்த   நேரத்தில்,  தங்களது  தலைவன் வீர  ராஜூவைப்  பின்தொடர்ந்து வந்து,  புதர்களில்  மறைந்து  இருந்த  நூற்றுக்கணக்கான ' கொள்ளையர்களும்'  சட்டென  எழுந்து   நின்று " ஜமீன்தார்   வாழ்க! வீர  ராஜு  வாழ்க!  இளவரசி வாழ்கஎன்று   கைகளையும்  ஆயுதங்களையும்  உயர்த்தி    ஆனந்த  கோஷம்   இட்டனர்!  

 ஜமீன்தாருக்கு  ஒரே  ஆச்சர்யம்   ஆகிவிட்டது. "  இவர்கள்  எல்லாரும் யார்.?  இத்தனை  நாள்  எங்கே  இருந்தார்கள்? " என்று  வீர  ராஜுவிடம்  கேட்டார். "   அரசே! இவர்கள்   .   அனைவரும்  மிகவும்   நல்லவர்கள்! வீரர்கள்.!  அச்சம்  என்பதே சுத்தமாக அறியாதவர்கள் !மிகவும்   . ஒழுக்கம் மிக்கவர்கள்.   அறிவு  கெட்ட   அதிகாரிகளின் துன்புறுத்துதலுக்குத்   தப்பி, காட்டில்  மறைந்து    வாழ்கின்றனர்.  தாங்கள்  இவர்கள்   அனைவரையும்   மன்னித்து, நமது ஆயுதப்  படையில்   சேர்த்துக்கொண்டால், நமது   ராஜ்யத்திற்கு  உயிரையும்  தந்து  உண்மையாக    உழைப்பார்கள்."  என்றான் வீர  ராஜு! 

  "   நீ    சொன்னால்   .சரிதான்.!   இவர்கள்  எல்லாரையும் இப்போதே மன்னித்துவிட்டேன்.   இனி   ,காட்டில்  மறைந்து   வாழ   வேண்டியதில்லை. நமது   ஜமீனுக்கு  இத்தகைய  வீரர்கள்தான் மிகவும்   தேவை.  உனது படையில்,  அனைவரையும்    . சேர்த்துக்கொள்.    இனி  இவர்கள்  எல்லோரும்  விஜயபுரி  ஜமீனின்  கௌரவமிக்க  காவல் வீரர்கள்.என்று  மன்னித்து   அனுமதி அளித்தார். 

  பல  ஆண்டுகளாக  அதிகாரிகளுக்கு அஞ்சி,  காட்டில்   தலைமறைவு  வாழ்க்கை    வாழ்ந்துவந்த  கொள்ளையர்களுக்கு  சந்தோஷத்தில் தலை   கால்   புரியவில்லை. கும்பல்  கும்பலாக  சுற்றியிருந்த புதர்களில் இருந்து  வெளி வந்து   நன்றிக் கண்ணீருடன், ஜமீன்தாரின்   காலடியில்   விழுந்து ஆசி   பெற்றார்கள்   

   இவ்வாறு,   பங்கஜம்,  ரத்னாதேவி  போன்ற உண்மையான  பெண்  ரத்னங்களின்  நேர்மையும்   , தைர்யமும்   வெற்றி பெற்று   எல்லோருக்கும்  நன்மையில் முடிந்தது.   
                                                         சுபம்! 
--   
--        
.    .
    
 

     
,
 
  

           
.    .

Popular posts from this blog

MERCHANT OF VENICE ( in THAMIZH)

                                                        MERCHANT OF  VENICE                                                PLAY  BY  SHAKESPEARE  ( 1600) TALE     RETOLD    BY  MARY  LAMB ( 1800) ( Tales  from Shakespeare) Adaptation/ Translation  in Thamizh  (   தமிழ் ) by RSR =============================== This  is  the  tenth  tale   in the  proposed  10  tales. ------------------------------------------------------ ------------------------------------------------ INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=merchantvenice ------------------------------------------- The  original  text  of  the  tale by Mary Lamb  is at https://comediesmarylamb.blogspot.com/2020/02/merchant-of-venice.html?view=flipcard ------------------------------------------------- Name

AS YOU LIKE IT (THAMIZH)

                                                                                                               Play by Shakespeare  ( 1600) Retold by  Mary Lamb   (1800)          ( Tales from Shakespeare) Adaptation/translation  by RSR  in thamizh  தமிழ்     AS YOU LIKE IT original english tale  at https://comediesmarylamb.blogspot.com/2020/02/as-you-like-it.html?view=flipcard ------------------------------------------------------ Fil m  with  subtitles at    h ttps://www.youtube.com/watch?v=u9hTxzLHU3I -------------------------------------------------------------------------- INDEX TO THE OTHER TALES  IN THAMIZH AT https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html original play by the BARD http://www.opensourceshakespeare.com/views/plays/plays.php http://www.opensourceshakespeare.com/views/plays/playmenu.php?WorkID=asyoulikeit                                உ ங்கள்  விருப்பம்       நீலாம்புரம்  மிகவும்  அழகான  சிறிய ராஜ்யம்..  அடர்ந்த காட்டுப்   பகுதிய

ALL IS WELL THAT ENDS WELL

                     ALL'S  WELL THAT  ENDS WELL PLAY  BY  SHAKESPEARE  ( 1600) RETOLD  BY MARY LAMB  (1800) ADAPTED AND TRANSLATED  BY  RSR IN THAMIZH ========================================= COPY RIGHT  MATERIAL. ========================================== https://comediesmarylamb.blogspot.com/2020/03/alls-well-that-ends-well.html?view=flipcard                                                நல்லதே  வெல்லும் விதேஹ   நாட்டின்   மன்னன் , கீர்த்திசேகரன்..    தனது ஆருயிர்   நண்பன் ஜெயதேவன்   எதிர்பாராத விதமாக   இளம் வயதிலேயே   பிரிந்து விட்டதை   நினைத்து ,,   ஜெயதேவனின்   மகனை அரசவைக்குக் கொண்டு    வந்து   அங்கு ஒரு    முக்கிய   பதவியில்   அமர்த்த நினைத்து ,    அவனை   அழைத்து    வர , மிகவும்   அனுபவமிக்க , பண்பாளன் , கோமான்    சுதர்சனசேனனை பிரயாகை   நகருக்கு அனுப்பி     வைத்தான்.       ஜெயதேவனின்    மகன் பெயர்    விக்ரமசேனன்..   நல்லவன் தான்   .   எனினும் தனது    உயர்குலப்   பெருமை பற்றி   சற்று    கர்வம்    கொண்டவன்..   அவன் அன்னையின்   பெயர்   அனசூ